ஹைதராபாத்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் முடிவுகள் இன்று (டிச.22) வெளியாகின.
இது தொடர்பாக அரசியல் நிபுணர் சங்கித் குமார் ராகி கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் உண்மையான ஜனநாயகம் நடக்கிறது.
பெரும் கட்சிகளின் ஆதரவின்றி பல சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தல் முடிவுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளன.
குப்கர் கூட்டணி
பல தலைவர்கள் அடிமட்டத்திலிருந்து உருவாகி வருகின்றனர்” என்றார். தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்பட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள குப்கர் கூட்டணி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “தேர்தலில் பங்கேற்காவிட்டால் அழிக்கப்படுவோம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
இக்கூட்டணி அரசியல் கட்சி அல்ல, வம்ச அமைப்புகள். இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் செழிக்க ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
புற்றுநோய்
ஒரு தரப்பில் தந்தையிடமிருந்து மகள் (மெகபூபா முஃப்தி) அதிகாரத்தை பெறுகிறாள். மறுதரப்பில், தந்தை அதிகாரத்தை மகனிடம் (உமர் அப்துல்லா) ஒப்படைக்கிறார்.
மேலும், யூனியன் பிரதேசத்தின் பாரம்பரியக் கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான சொல்லாட்சியை உருவாக்குகின்றன.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டிற்கும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஒரு புற்றுநோய் என நான் காண்கிறேன்” என்றார்.
1987ஆம் ஆண்டு தேர்தல்
ஜம்மு காஷ்மீரில் 1987ஆம் ஆண்டு தேர்தல் அபாயகரமான திருப்புமுனையாக அமைந்தது. தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்தனர். பாகிஸ்தானை நோக்கி எல்லை தாண்டியதுடன், இந்திய அரசுக்கு எதிராக போராடவும் செய்தனர். ஆனால் தற்போது ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வளர்ச்சியை எதிர்நோக்குகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: 'பாஜக அரசியல் லாபத்துக்காக, குறுகிய அரசியல் செய்கிறது'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்