காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 15 நாட்களாக பரபரப்புக்கு பஞ்சம் இன்றி தினம்தோறும் இவ்விவகாரம் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உடைக்கப்பட்டு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு அளித்துள்ள போதிலும், அண்டை நாடான பாகிஸ்தான், சீனா ஆகியவை இவ்விவகாரத்தை ஐநா வரை எடுத்துச் சென்றன.
காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் என்பதால் இதில் பிற நாடுகள் மூக்கை நுழைப்பது சரியாகாது என்ற நிலைபாட்டில் மத்திய அரசு உள்ளது. இந்த நிலையில், காஷ்மீரில் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இதுவரை இல்லாத அளவுக்கு கெடுபிடிகள் அமலில் உள்ளன.
அம்மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் இருந்து வருகின்றனர். அமலில் இருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிபடியாக தளர்த்தி வரும் நிலையில், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
சாலைகளில் போட்டப்பட்டிருந்த தடுப்புகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள போதும் மாணவர்கள் வருகை இன்றி பள்ளி வளாகங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. அரசு நிர்வாகம் பள்ளிகளை மீண்டும் திறந்து தடைபட்ட கல்வியை புதுப்பிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ள போதும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.