உத்தரப் பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள தின் நகர் ஷெய்க்பூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின விவசாயி நேது லால் ஜாதவ் (65). இவர் திங்கள்கிழமை (செப். 21) தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்து தோட்டத்து மற்றொரு விவசாயி ரூப் கிஷோர், தனது வயலுக்கு தண்ணீரைத் தருமாறு ஜாதவிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜாதவ், தனது வயலுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும் எனத் தண்ணீர் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரூப் கிஷோர், தனது கையிலிருந்த மண்வெட்டியால் ஜாதவின் தலையில் தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வந்து தடுத்துள்ளனர். அப்போது கிஷோர் தப்பித்து ஒடியுள்ளார்.
இது குறித்து ஜாதவின் மகன் ஓம்பல் கூறுகையில், “நானும் தந்தையும்தான் வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் சாய்ந்ததால், எனது தந்தை என்னை வீட்டிற்குச் சென்று உணவை தயார் செய்ய சொன்னார். ஆனால் தந்தை அதிகாலையிலும் வராததால், வயலுக்கு வந்துகொண்டிருந்தேன்.
அப்போது, எங்கள் உள்ளூர்வாசி ஒருவர்தான், ‘உன் தந்தையை கிஷோர் வெட்டிக்கொலை செய்துவிட்டார்’ எனக் கூறினார். பின்னர் வயலுக்குச் சென்று பார்த்தபோது என் தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இந்தக் கொலைக்குப் பின்னால் கிஷோர் மட்டுமின்றி, அவருடன் இன்னும் சிலரும் இருக்கலாம்” என்றார்.
இதனையடுத்து ஓம்பலின் புகாரின் அடிப்படையில் ரூப் கிஷோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி: சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்