உத்தரப் பிரதேசம் மாநிலம், ரேபரலியில் பெஹ்தா கலன் கிராமத்தைச் சேர்ந்த மோஹித் (19) மற்றும் அவரது சகோதரர் சோனு ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.28) வாகன திருட்டு சந்தேகத்தின் பேரில் லல்கஞ்ச் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு சோனு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், மோஹித் தொடர்ந்து காவல் துறை கண்காணிப்பில் இருந்துள்ளார். விசாரணையில், மோஹித் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியில் மோஹித் உடல்நிலை மோசம் அடைந்ததும் மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து ஒன்றுக்கூடிய மோஹித் குடும்பத்தினர், உறவினர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின நபர் என்ற காரணத்தினாலேயே காவல் துறையினர் அடித்துக்கொன்று விட்டதாகவும், நடவடிக்கை எடுக்குமாறு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஸ்வப்னில் மம்கெய்ன் கூறுகையில், " உயிரிழந்த மோஹித் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரில் மோஹித் சித்தரவதை செய்து கொல்லப்பட்டதாகவும், இரண்டு துணை ஆய்வாளர்கள் (எஸ்ஐ) தான் காரணம் என சுட்டிக்காட்டினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட துணை ஆய்வாளர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்தில் அழைத்து வந்த நபரை 24 மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைத்திருத்த குற்றத்திற்காக, லல்கஞ்ச் காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓ (Station House Officer) ஹரி சங்கர் பிரஜாபதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார். மேலும் மூத்த அலுவலர்கள் மோஹித்தின் குடும்பத்தினரைச் சந்தித்து, இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தனர்.