திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவின் 85ஆவது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரையிலான ஓராண்டு முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு நாடு கடந்த திபெத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை உலகம் முழுவதும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு, இயர் ஆப் கிராட்டிடியூட் - நன்றி தெரிவிக்கும் ஆண்டாக கொண்டாடப்படும் என திபெத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய திபெத்திய நிர்வாக தலைவர் லோப்சாங் சங்காய் கூறுகையில், "தலாய் லாமாவின் வாழ்க்கை, அவரின் நான்கு கொள்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலகம் முழுவதும் உள்ள திபெத்தியர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய உலகம் தினந்தோறும் அதிர்ச்சியை சந்தித்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள், மக்கள் நலம்பெற பிரார்த்தனை மேற்கொள்கிறோம். தலாய் லாமாவின் போதனைகள் மூலம் நம்பிக்கை பெற்று அமைதியான வாழ்க்கையை வாழலாம். மனித இனத்தின் ஒற்றுமையை கோரும் அவர், வாழ்க்கையை வாழ்வதற்கு கருணை, இரக்க குணம் ஆகியவை தேவை என தெரிவிக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரிப்பு!