2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்துறை படையின் வாகன அணியை தற்கொலைப் படைக் குண்டுதாரி தாக்கி, அதில் 40 படையினர் படுகொலை செய்யப்பட்டனர். பன்னிரெண்டு நாள்கள் கழித்து, பிப்ரவரி 26 அன்று இந்திய வான் படை பதிலடித் தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாநிலத்தில் அமைந்துள்ள பாலக்கோட்டில் இருந்த ஜெய்ஸ் - இ - முகமது பயங்கரவாத முகாமைக் குறிவைத்து அந்தத் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாட்டுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்த 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் மீது இந்திய வான் படை நடத்திய முதல் தாக்குதல் அது.
மறுநாள், பாகிஸ்தான் வான் படையானது எதிர்த் தாக்குதலை நடத்தியது. ஆனால், அதில் நமக்கு களத்தில் எந்த சேதமும் ஏற்படாதபடி அவர்களுக்குத் தோல்வியாக முடிந்தது. இருந்தும் வான் தாக்குதலில் பாகிஸ்தானின் எப்- 16 வகை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தியத் தரப்பில் மிக் - 21 வகை போர் விமானத்தை இழக்க நேரிட்டது. ஆனால், உயிர் தப்பிய விமானியின் பாராசூட் பாகிஸ்தான் நிலப்பரப்பில் போய் விழுந்தது. அதனால் அங்கு அவர் சிறைபிடிக்கப்பட்டார். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் சூழலானது, பிரச்னை பெரிதாக வெடிப்பதைப்போல மாறியது. நல்வாய்ப்பாக, உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாகவும் அந்த விமானி விரைவில் இந்தியாவுக்குத் திரும்பியதாலும் இரு தரப்பும் அடுத்த கட்டமாக தாக்குதல் ஏதும் நடத்தாமல் தவிர்க்கும்படி ஆனது.
இந்திய அரசியல் அரங்கில் வழக்கம்போல, உடனே ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் பாலக்கோட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை குறித்த தகவல்களை வெளியிடுவதில் குழப்பத்துடனான கடும்போட்டியில் ஈடுபட்டன. வெளிநாட்டு ஊடகங்களும் இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் இறங்கின. அத்துடன், பாலக்கோட் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் இணையத்தில் சுற்றுக்கு விடப்பட்டு பரவின. இந்தியத் தரப்பின் வாதத்தை கணிசமானவர்கள் நியாயப்படுத்தினர். மற்றவர்கள் அந்த வாதம் குறித்து கேள்வி எழுப்பினர். சரியாக ஓராண்டுக்குப் பிறகு இப்போது பாலக்கோட் தாக்குதலை குறித்த குழப்பங்கள் தீர்ந்துவிட்டன.
ஒரு நாட்டுக்கு நெருக்கடி என வரும்போது, இராணுவ வலிமையின் அளவைப் பொறுத்து மட்டும் அதன் நம்பகத் தன்மையைத் தீர்மானித்துவிட முடியாது. அந்த இராணுவ வல்லமையைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை, அதாவது தன் நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கு அதற்குள்ள விருப்பத்தையும் பொறுத்தே முடிவெடுக்க இயலும்.
நீண்ட காலமாக, பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை இந்திய அரசானது தற்காப்பு நிலையையே கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக, தாங்கள் எது செய்தாலும் தண்டிக்கப்படமாட்டோம் என்கிற கணக்கில், காஷ்மீரில் பாகிஸ்தான் தரப்பு, நிழல் யுத்தத்தை நடத்தத் தொடங்கியது. இதுதான், இப்பிரச்னையில் இராணுவத்தைப் பயன்படுத்தி தீர்வு காணவேண்டும் என இப்போதைய இந்திய அரசுத் தலைமையிடம் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். இந்தியாவுக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து துணையாக இருப்பதை பாகிஸ்தான் விரும்புமானால் அதற்கான விலையையும் கொடுக்க நேரிடும் என்பதை அந்த நாட்டு அரசாங்கம் கணக்கில்கொள்வது இன்றியமையாதது.
பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றுக்கு வான் படையின் பதிலடித் தாக்குதல் என்பதில் பாலக்கோட் தாக்குதல்தான் முதல்முதலாக அமைந்தது. வான் படைத் தளபதி பதாரியா அளித்த பேட்டி ஒன்றில், ' பாலக்கோட் வான் படைத் தாக்குதலானது தேசியப் பாதுகாப்பு நோக்கத்துக்காக வான் படையின் பயன்பாட்டு முறைமையை மாற்றி அமைத்தது. அத்துடன், இந்தத் துணைக்கண்டத்துக்கு உள்ளேயும் மரபுவழியில் மட்டுமல்லாத எதிர் வினையிலும் முன்னுதாரணத்தை மாற்றி இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலும் பதிலடியான வான் தாக்குதலை நோக்கியதாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவு. ஆனால், இப்படியான தாக்குதலில் வான் படையைப் ஈடுபடுத்துவது என்பது, பாகிஸ்தான் அரசுக்கு இது குறித்து இந்தியா உணர்த்துவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களால் பொறுமையிழந்து, மிகவும் ஆக்ரோசமாகிவிட்ட இந்தியத் தரப்பு, பாகிஸ்தான் அரசின் குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? காஷ்மீருக்காக தங்கள் தேசத்தை எந்த அளவுக்கு அபாயத்தில் வைக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்பது குறித்து அந்த நாட்டு அரசாங்கத் தரப்புக்கு உள்ளேயே ஒரு தன்னாய்வு நடந்துகொண்டு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கார்கில் போருக்குப் பின்னர் பாகிஸ்தானில் இதேபோன்ற ஒரு விவாதம் நடைபெற்றது. அந்நாட்டின் முன்னாள் இராஜதந்திரியான சாகித் எம். அமீன், பாகிஸ்தானின் தி டான் நாளேட்டில், '(பாக்.) நாடு முன் எப்போதும் இல்லாதபடியாக நம் வரம்புகளையும் முன்னுரிமைகளையும் பற்றி ரொம்பவும் யதார்த்தமாக சிந்திப்பதாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்னையுடன் சேர்ந்து நிற்பது உள்பட எல்லாவற்றுக்கும் மேலாகவும் முன்னால் இருக்கக்கூடியதாகவும் பாகிஸ்தானின் நல்வாழ்வுதான் நிற்கவேண்டும்' என்று குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தானுக்குள் என்னமாதிரியான தன்னாய்வு இருந்தாலும்கூட, இந்தியாவுடன் போர் தந்திர ரீதியில் சமநிலையைப் பேணுவதற்கான அதன் நோக்கத்தை அந்நாட்டு இராணுவம் மாற்றிவிடும் என்பதற்கான வாய்ப்பு இல்லை. போர் தந்திர ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் அண்மையில் ஓய்வுபெற்ற பாக். இலெப். ஜெனரல் காலி கித்வாய் பேசுகையில், ' இந்தியாவுடன் மரபார்ந்த மற்றும் அணுஆற்றலின்படியான சமநிலையைப் பேணும் பொறுப்பை பாகிஸ்தான்தான் ஏற்க வேண்டும் என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. தெற்காசியாவில் போர் தந்திர ரீதியில் நிலைப்புத் தன்மை கொண்ட நாடாக விளங்குவது இந்தியாதான் என்பதே அதற்குக் காரணம்." என்று குறிப்பிட்டது, மிகவும் முக்கியமானது.
அணுசக்தி விவகாரத்தை மையமாகப் பேசுகையில், அவர் இன்னொரு படி மேலே போனார். 'நான் அவர்களை எச்சரிக்க விரும்புகிறேன். ஒரு வான்வழித் தாக்குதல், அதுவும் உரிய முறைப்படி நடத்தப்படாதது அது. அதன் மூலம் பாகிஸ்தானின் வலுவான அணுசக்தித் தடுப்பை ஒரு மோசடியெனக் கூறவைப்பது அவர்களின் தரப்பில் மிக மோசமான இராணுவ ரீதியிலான முட்டாள்தனம் என்றுதான் சொல்வேன்" என்றார், கித்வாய்.
இரு தரப்பினரும் பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதாக பாலக்கோட் தாக்குதல் வாய்த்தது. இரு தரப்பும் தவறான மதிப்பீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளன. அணு ஆயுதத்துக்குக் குறைவான மரபான இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது போதுமானது என இந்திய இராணுவத் தரப்பு கருதுகிறது.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள நாடு தனது அதிகபட்ச படைத் திறனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்திய இராணுவம் தீவிரமாக விரும்புகிறது. மறுபுறம், பாகிஸ்தான் இராணுவமோ அதன் அணு அச்சுறுத்தலானது, அதன் மீதான ஒரு வரம்புக்கும் மேற்பட்ட இந்தியாவின் தாக்குதலை அதிகரிக்காமல் தடுக்கும் என்றும் கருதுகிறது. இது, மரபார்ந்த சமச்சீரற்ற தன்மையை நடுநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.
நிச்சயமற்ற இந்த நிலைமையில், இரு தரப்பினரும் தங்களின் தெரிவுகளையும் அரசியல் நோக்குகளையும் பற்றி மெய்யாகவும் அறிவுப்பூர்வமாகவும் யோசனை செய்ய வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலே, பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கான முதல் படி என்பதை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும். அப்படியான நிலையைத் தவிர்த்தாலே அடுத்தகட்ட மோதல் என்பது தேவையற்ற ஒன்றாகி விடும்.