மகா புயல் நேற்று மாலை குஜராத் மாநிலம் வேரவாலிலிருந்து தென்மேற்குத் திசையில் 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. சுமார் ஒன்பது கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துவரும் மகா புயல் நாளை திசைமாறி குஜராத்தை நோக்கி திரும்புகிறது. தீவிரப் புயலாக வலுகுறையும் மகா புயல் டையு, துவாரகா இடையே நாளை மறுநாள் இரவு கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது, மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மகா புயல் திசை மாறுவதால் கொங்கன், வட மத்திய மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடைந்த 'மகா' புயல்!