ஒடிசாவில் பலத்த சூறாவளிக் காற்று, கனமழையுடன் ஃபானி புயல் நேற்று (மே 3) கரையைக் கடந்தது. இந்த புயலால் புவனேஸ்வர், புரி ஆகிய நகரங்களும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் புரியில் மரம் ஒன்று விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நயாகர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானர். இதே போல், சில கிராமங்களில் வசித்த பேர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஒடிசாவிற்கு செல்லும் ரயில்கள், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது புயல் நகர்ந்து மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே வலுவிழந்து காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு நிவாரண உதவியாக 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.