நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் வீடுகளில் முடங்கியுள்ளதால், இணையத்தின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளனர். இச்சமயத்தில் தான் ஹேக்கர்ஸ் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் முகேஷ் சவுத்ரி கூறுகையில், "இந்த தொற்றுநோய், ஊரடங்கு காரணமாக இணையப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, சைபர் குற்றவாளிகள், பயனர்களை கவர்ந்திழுத்து அவர்களின் கணினியைத் தாக்கி வருகின்றனர். குறிப்பாக, ஹேக்கர்ஸ் மதுபான விற்பனை, கோவிட் -19 பராமரிப்பு செயலி போன்ற போலி விளம்பரங்களைப் பரப்பிதான் மக்களை ஏமாற்றுகின்றனர்.
சமீபத்தில் மும்பைவாசி ஒருவர் போலியான தளத்தில் மதுபானம் வாங்கி, 60 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்தார். எனவே, சைபர் குற்றவாளிகள் அனுப்பும் போலி செயலி விளம்பரங்கள், கரோனா விளம்பரங்கள் ஆகியவற்றிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேசவரதன் கூறுகையில், "சைபர் குற்றவாளிகள் பெரும்பாலும் விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்டின் விண்டோஸ் 7 ஓஎஸ் ஆகிய இரண்டை தான் குறிவைக்கின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த இரண்டு ஓஎஸ்ஸுக்கு தான் புது அப்டேட்கள் வழங்குவதை நிறுத்தியுள்ளது. சிக்கலான வைரஸ்களான ட்ரோஜான்கள், ransomware ஆகியவற்றை தான் பெரும்பாலும் சைபர் தாக்குதலுக்கு அனுப்புகின்றனர்.சென்னை, பெங்களூருவில் தான் அதிகளவில் சைபர் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன" என்றார்.