ஜம்மு - காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதிலிருந்து அங்கு கடும் பதற்றம் நிலவிவருகிறது. அங்குள்ள முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் அச்சுறுத்தலான சூழலில் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள் என மிக அவசியமான துறைகளின் ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து பணியாற்றிவருகின்றனர். ஆனால் ஊடகவியலாளர்களை ஒடுக்கும் முயற்சியை அரசாங்கம் எடுத்துவருகிறது என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குச் சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காஷ்மீர் ஊடகவியலாளர் மஸ்ரத் சரா மீது உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) பாய்ந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் வன்முறையைத் தூண்டும்விதமாக பதிவிட்டார் என அவர் மீது இவ்வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீநகர் சைபர் காவல் துறையினர், மஸ்ரத் சரா என்னும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் தேசவிரோத போக்குடன் வன்முறையைத் தூண்டும்விதமாக பதிவிடுகிறார். அவர் பதிவிடும் புகைப்படங்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும்விதமாகவும், தேசவிரோதப் போக்கை ஆதரிக்கும் விதமாகவும் உள்ளதென எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் விசாரணைசெய்து முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்தோம். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை (இன்று) முன்னிலையாகும்படி ஆணையிடப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவித்தனர்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது குறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த மஸ்ரத், "காஷ்மீரில் ஊடகவியலாளர்கள் குரலை ஒடுக்க நினைக்கிறது அரசாங்கம். காவல் துறையினர் எந்த இடத்திலும் என்னை ஒரு ஊடகவியலாளர் எனக் குறிப்பிடவில்லை.
அவர்கள் என்னை ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியா, சர்வதேச அமைப்புகளின் சமூக வலைதளங்களில் பிரசுரித்த எனது புகைப்படங்களைப் பகிர்ந்ததற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது" என்கிறார்.
தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூ ஹுமனிடேரியன், அல்ஜசீரா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் மஸ்ரத் சராவின் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வன்முறை பதற்றம் நிறைந்த பகுதிகளில் பெண்கள், குழந்தைகளின் நிலை குறித்து தொடர்ந்து எழுதிவருபவர் மஸ்ரத்.
மக்களின் குரலாக ஒலிக்கும் இவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் பாய்ந்ததற்கு ஊடகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பினர், பல்வேறு ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மஸ்ரத் மீது தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை?