"நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். பேடிஎம் செயலியை எனது போனில் எனது மகன் பதிவிறக்கம் செய்தான். மூன்று நாள்களுக்கு முன்பு சந்தீப் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு, விவரங்களைப் புதுப்பிக்க குயிக் சப்போர்ட் என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பதிவிறக்கம் செய்த பின்பு போனுக்கு ஒரு கோட் வரும் எனவும் அவர் தெரிவித்தார். திங்கள்கிழமை, எனக்கு மூன்று குறுஞ்செய்திகள் வந்தன. அடுத்த சில மணி நேரங்களில், 2.2 லட்சம் ரூபாய் எனது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. நான் எனது ஓடிபியை (OTP) யாருக்கும் கொடுக்கவில்லை. என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை" என ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுமாதிரியான சம்பவம் ஒரு இடத்தில் மட்டும் நிகழவில்லை. ஸ்மார்ட்போன் பயனாளர்களில் குயிக் சப்போர்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்த 80 விழுக்காட்டினருக்கு இதேபோல் நடந்துள்ளது. மொபைல் பேங்கிங், இணையதள பணப் பரிமாற்ற செயலி எனக் கருதிய பயனாளர்கள் சிலர் அதனைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். மென்பொருள் நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் இதனால் பயனடைந்துள்ளனர். அச்செயலியின் அம்சங்களை முடக்கிய சைபர் குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பணத்தைத் திருடினர்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் டிஜிட்டல் சேவைகளைத் தொடங்கியுள்ளன. எஸ்பிஐ, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள்தான் பிரபலமான டிஜிட்டல் வாலட் செயலிகளை வைத்துள்ளன. கூடுதலாக, பேடிஎம், போன் பே ஆகியவை டிஜிட்டல் பணபரிமாற்ற சேவைகளை மேற்கொள்கின்றன.
இந்நிலையில், குயிக் சப்போர்ட் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளிலிருந்து சைபர் குற்றவாளிகள் திருடுகின்றனர். ராஜஸ்தான், பிகார் ஆகிய மாநிலங்களில் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி குயிக் சப்போர்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்ய சைபர் குற்றவாளிகள் தூண்டுகிறார்கள்.
இதுகுறித்து சைபர் பிரவு துணை காவல் ஆணையர் கேவிஎம் பிரசாத் கூறுகையில், "வங்கி விவரங்கள், போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற முக்கியமான தகவல்களை சில செயலிகள் மூலம் ஹேக்கர்கள் திருடுகின்றனர். யாரேனும் தொடர்புகொண்டு குயிக் சப்போர்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தூண்டினால், அதனைத் தவிர்க்க வேண்டும். செயலியின் விவரங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், அதனைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: 91 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன