இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவமும் மோதிக்கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சீனா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பூசல், கரோனா பேரிடர், பொருளாதார பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "நாடு தற்போது கரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை, சீனாவுடன் எல்லைப் பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. இந்த மோசமான சூழலுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளே முக்கியக் காரணம்.
நாட்டின் சிறு, குறு தொழில் துறையினர் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிதிச்சலுகையே வழங்காமல், மத்திய அரசு புறக்கணித்துவருகிறது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி பொதுமக்களை வாட்டிவதைக்கும் செயலில் ஈடுபடுகிறது. கரோனா பெருந்தொற்றை மோடி அரசு கையாளுவதில் பெருந்தோல்வி கண்டுள்ளது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசு கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முறையான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும், எல்லை விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான, தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: முழுவீச்சில் வெட்டுக்கிளி கட்டுப்பாடு நடவடிக்கை: மத்திய அரசு