2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று கொண்டார்.
அவரின் தலைமையில் காங்கிரஸ் டெல்லி சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஆக.24) டெல்லியில் கூடியது.
முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு, காந்தி அல்லாத குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக வரவேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார். இதனால் இந்த செயற்குழு கூட்டத்தில் தலைவர் மாற்றப்படலாம் என கருத்துகள் நிலவின.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 23 மூத்தத் தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த விவகாரமும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் செயற்குழு கூட்டம் தொடங்கி நடந்தது. சுமார் 7 மணி நேரத்துக்கு பின்னர், காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து செயல்படுவார் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனை கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், மூத்தத் தலைவர்களின் கடிதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர்கள் முழு நேர தலைவரை விரும்புகிறார்கள்” எனப் பதிலளித்தார்.
காந்தி அல்லாத குடும்பத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்ற கோரிக்கைக்கு, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அக்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்- அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் சோனியா காந்தி தலைவராக நீடிப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடிதம் எழுதிய 23 மூத்தத் தலைவர்களும், பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
இதற்கு மூத்தத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவுடன் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால், கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். இதனால் செயற்குழு கூட்டத்தில் கூச்சல்- குழப்பம் நிலவியது.
அதன்பின்னர் ராகுலின் விளக்கத்தை தொடர்ந்து, இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை: காங்கிரஸ் தலைமைத்துவத்தின் சிக்கல் வரலாறு