திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ஏறத்தாழ 30 கிலோ எடைக்கொண்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து என்ஐஏ மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட சிலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் தங்கக் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் டி.எம் முஹம்மது அன்வர், எம் முஹம்மது அப்து ஷமீம் மற்றும் ஜப்சல் ஆகிய மூன்று பேரையும் தனியே முகமை கைது செய்து காவலில் வைத்து விசாரணை செய்துவருகின்றது. இதனிடையே, அந்த மூவரின் காவல் முடிவடைந்ததையடுத்து, கேளர உயர் நீதிமன்றத்தில் முன் பிணைக்கோரி (பொருளாதார குற்றங்களுக்கான தலைமை நீதித்துறை பிரிவில்) மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சுங்கத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், "இந்த வழக்கை விசாரிக்கும் சுங்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்போடு தற்போது அமலாக்கத்துறையும் விசாரணையில் இணைந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அமலாக்கப் பிரிவின் கீழ் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது என்பதால் அந்த துறையினரும் விசாரணையில் இணைந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு உயர் அலுவலர்கள் மற்றும் அதிகாரத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. மோசடியில் ஈடுபட்ட இந்த கும்பல் தங்கக் கடத்தலுக்காக பணத்தைத் திரட்டி, அதனை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வளைகுடாவுக்கு மாற்றி அங்கிருந்து தங்கத்தை கடத்தி இருக்கிறார்கள்.
இத்தகைய பொருளாதார குற்றத்தில் ஈடுபடும் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர் என்பதை அவர்களே வாக்குமூலமாக அளித்துள்ளனர். பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பெரும் குற்றத்தை செய்து வந்துள்ளனர். இந்த குற்றத்தில் தொடர்புடைய பலரை அடையாளம் காண விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
அதுதவிர, வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் மூலமாக இந்த குற்றங்களைச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதால் அவர்களின் பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட மூவரது பிணை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.