புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம். இங்கு சனீஸ்வர பகவானுக்கென தனி சன்னதி அமைந்துள்ளது. சனீஸ்வர பகவானை தரிசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இங்கு பக்தர்கள் குவிவது வழக்கம்.
இதனிடையே, கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் கோயில்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வில் கோயில்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலம் முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஜூன் மாதம் திறக்க அனுமதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தாலும், இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்ததால் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் முறையை ரத்து செய்ததை அடுத்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று (செப் 5), ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயத்தில் வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
பக்தர்கள் அனைவரும் தகுந்த இடைவெளி, முகக் கவசங்கள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், மாவட்டத்தில் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.