ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் (சி.ஆர்.பி.எஃப்.) ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தாமாக தோன்றி, “சீனப் பொருள்களை தவிர்ப்போம். சாப்பிடும் பொருளாக இருந்தாலும் சரி. துணி, தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி. சீனப் பொருள்களை நிராகரிப்போம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்தக் காணொலிக் காட்சி சற்று நேரத்தில் பலராலும் பார்க்கப்பட்டு, விரும்பப்பட்டு, கருத்துகள் பதியப்பட்டு, பகிரப்பட்டது. விளைவு, சற்றுநேரத்தில் அந்தக் காணொலி வைரலானது. இந்நிலையில் சி.ஆர்.பி.எஃப். விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சி.ஆர்.பி.எஃப். செய்தித் தொடர்பாளர் எம்.தினகரன் அளித்துள்ள விளக்கத்தில், “இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல. இது உள்ளூக்குள் இருந்து எழுந்த உணர்ச்சிப் பெருக்கு. இதனை நாங்கள் கவனித்துவருகிறோம்” என்றார். அண்மையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவு சரியாக இல்லை.
லடாக்கில் இந்திய ராணுவம் சாலை அமைத்துவரும் நிலையில், அதற்கு சீனா முட்டுக்கட்டை போடுகிறது. சீனாவின் எல்லையை இந்தியா தொடுவதாக அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில் சீனாவை பொருளாதார ரீதியாக அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் இவ்வாறு வெகுண்டெழுந்துள்ளார்.
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், மாவோயிஸ்ட் பாதித்த இடங்களில் காவல் பணி, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு என மூன்று லட்சத்து 50 ஆயிரம் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் நாடு முழுக்க பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் லிச்சி பழ விவசாயிகள் கடும் பாதிப்பு