நக்சலைட்டுகளுக்கு எதிரான மத்திய ரிசர்வ் காவல் படையின், கமாண்டோ பிரிவான கோப்ரா படைப்பிரிவில் பெண்களைச் சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 35ஆவது அனைத்து பெண்கள் பட்டாலியன் எழுச்சி தினமான இன்று (பிப்.6) 88ஆவது மஹிலா பட்டாலியனைச் சேர்ந்த 34 பெண் வீரர்கள் கோப்ரா படையில் இணைக்கப்பட்டனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கமாண்டோ படையிலுள்ள கோப்ரா படையினர் அனுப்பப்பட்டனர். இதில் ஆண் வீரர்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில் தற்போது பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வோடு, பெண்கள் அடங்கிய மஹிலா பேண்ட் குழுவும் இன்று தொடங்கப்பட்டது. மத்திய ரிசர்வ் காவல் படையில் பெண்களின் பேண்ட் வாத்தியக் குழு தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.
இது தொடர்பாக மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,’பெண்கள் அதிகாரத்தில் மற்றொரு படி எடுத்து வைக்கும் வகையில் பெண் கமாண்டோக்கள் கோப்ரா படையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்காக சிஆர்பிஎப்-இன் 6 மஹிலா பட்டாலியன் குழுவிலிருந்து 34 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
கோப்ரா பிரிவுகளில் சேர்க்கப்படவிருக்கும் வீரர்கள் மனம் மற்றும் உடல் பலமுடையவர்களாக இருக்கவேண்டும். இதற்கான பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர், ஆயுதம் ஏந்துதல், களப்பணி, காட்டில் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன், போர் வியூகம் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படையில் பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது கோப்ரா படையிலும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விவசாயிகள் 'சக்கா ஜாம்' முற்றுகை - உஷார்நிலையில் காவல் துறை