காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சி முன்னதாக எப்படி இருந்ததோ இப்போது அப்படி இல்லை. இளம் தலைவர்களை அங்கீகரிப்பதில்லை. பாஜக குடும்பத்திற்குள் வர அனுமதித்த மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
நேற்று பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை சிந்தியா ராஜினாமா செய்தார்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருந்துவந்த அவர், கடந்த சில நாள்களாகவே கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் மாற்றுக் கருத்து கொண்டிருந்தார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் அதனை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 103 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. ஆனால், பாஜகவுக்கு 107 எம்எம்ஏக்களின் ஆதரவு உள்ளது. எனவே, அங்கு பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 'எங்களிடம் நடக்காது' - பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை