ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள பாலிமர் ஆலையில் வியாழக்கிழமை (மே7) அதிகாலை நச்சு வாயு கசிந்ததால் நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். 10 பேர் உயிரிழந்தனர். விஷவாயுக் கசிவு காரணமாக, ஆலையைச் சுற்றி 5 கிமீ பரப்பளவில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “இந்த விபத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக நடந்த குற்ற நிகழ்வாகும். முழு அடைப்புக்குப் பின்னர் ஆலை திறக்கப்பட்டுள்ளது. அப்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்ததா என முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விஷவாயு வெளியான நிலையில் மக்கள் மூச்சு விட சிரமப்பட்டு கூட்டம் கூட்டமாக ஓடினார்கள். இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. ஆகவே இந்த விபத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வழிவகை செய்வதோடு, நீதி விசாரணையும் நடத்த வேண்டும். மேலும், எல்ஜி பாலிமர்ஸ் நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு துயரம், போபால் விஷவாயுக் கசிவை நினைவுபடுத்துவதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும், விபத்து தொடர்பாக முழுமையான விசாரணையும் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.