கரோனா சூழல் குறித்து ஆலோசிக்கும் வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றுவருகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அடுத்த ஒரு சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என நிபுணர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் நம் விஞ்ஞானிகள் நம்பிக்கையாக உள்ளனர்.
மலிவான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலகம் மும்முரமாக உள்ளது. எனவேதான், இந்தியாவை எதிர்நோக்கி உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஒரு சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் அனுமதி வழங்கியவுடன், தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
சுகாதார பணியாளர்கள், கரோனா முன்கள பணியாளர்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
தடுப்பூசியின் விலையை நிர்ணயிப்பதில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்துவருகிறது. மக்கள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விலை தீர்மானிக்கப்படும். கரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகளின் குழு ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறது.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தடுப்பூசியை விநியோகம் செய்வதில் இந்தியா நிபுணத்துவமும் நல்ல அனுபவமும் பெற்றுள்ளது. அதனை சரியாக பயன்படுத்துவோம். இதில், அனைத்து கட்சி தலைவர்களும் எழுத்துப்பூர்வமாக ஆலோசனை வழங்க கோரிக்கை விடுக்கிறேன். அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும் என உறுதி அளிக்கிறேன்" என்றார்.