உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. சுமார் எட்டு மாதங்களாக ருத்ரதாண்டம் ஆடிவரும் கரோனா தொற்றால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த பலரின் குடும்ப உறுப்பினர்களை கரோனா பறித்துவிட்டது. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தாலும், வறுமையிலும் சோகத்திலும் தள்ளப்பட்டுள்ள மக்களால் மீண்டுவருவது கடினம்தான்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மகிழ்ச்சியுடனும், வளமுடன் வாழ்ந்துவரும் வியாஸ் குடும்பத்திற்குள் புகுந்த கரோனா தொற்று 28 நாள்களில் மூன்று பேரின் உயிரைப் பறித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி மூத்த சகோதரரான 65 வயதான ஷியாம் வியாஸ் கரோனாவால் இறந்தார்.
அவரின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு, குடும்பத்தினர் அனைவரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஷியாம் வியாஸின் இரண்டு சகோதரர்களும் அடுத்ததடுத்து கரோனா தொற்றால் உயிரிழந்தது முழு தலைமுறையும் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்தப் பேரழிவு இன்னும் முடிவடையவில்லை. தற்போதும், வியாஸ் குடும்பத்தில் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.