இந்தியாவில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதால் அதைத் தொடரப்போவதாக டெல்லி முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
பிளாஸ்மா சிகிச்சை என்பது இன்னும் பரிசோதனை முறையில் உள்ளதாகவும், அதன்மூலம் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய அரசு சில நாள்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாகச் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதை நாங்கள் நிறுத்தப்போவதில்லை. சிகிச்சையில் தற்போது வரை நல்ல முடிவுகள் கிடைத்துவருகிறது.
இருப்பினும், இந்த சிகிச்சை முறை சோதனை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ள 1,100 நபர்களிடம் பிளாஸ்மாவை தானம் தர கேட்டுள்ளோம்" என்றார்.
டெல்லியின் ஒரு மில்லியன் மக்களில் 2,300 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்துவரும் திட்டம் குறித்து பேசிய அவர், "ராஜஸ்தானில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்துவர டெல்லி அரசு 40 பேருந்துகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து டெல்லி திரும்பும் மாணவர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் ரேசன் பொருள்கள் ஐந்து கிலோவிலிருந்து 10 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க உ.பி. அரசு நடவடிக்கை!