உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் வேளையில், உலகளவில் தன்னுடைய மருந்து நிறுவனத்தை விரிவு செய்திருக்கும் ஃபைசர் நிறுவனம், தனது கரோனா தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
சர்வதேச மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் ஃபைசர் இன்க் தலைவரும், தலைமை நிர்வாக அலுவலருமான ஆல்பர்ட் பௌர்லா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "எங்களது நிறுவனம் சுமார் மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் குளிர்பதத்தில் சேமிக்கும்வகையில் தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை சாதாரண வெப்பநிலையிலும் செயல்படும் வகையில் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்திற்கும் கரோனா தடுப்பூசி சென்றடைவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம், இதில் எந்த லாப நோக்கமும் இல்லை. தடுப்பூசியின் விலை நாடுகளுக்கு நாடு மாறுபடும்" எனத் தெரிவித்துள்ளார்.
"அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசியை விநியோகிக்கத் தயாராக உள்ளோம். தடுப்பூசியின் விலை அந்தந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படும். இது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: இங்கிலாந்தைத் தொடர்ந்து கனடாவிலும் பயன்பாட்டுக்கு வரும் ஃபைசர் கரோனா தடுப்பூசி!