சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கரோனா தீநுண்மி (வைரஸ்) தொற்று உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்தக் கரோனா தொற்றால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோய் வெளிநாடுகளில் படிக்க விரும்பும் 48 விழுக்காடு இந்திய மாணவர்களின் முடிவை பாதித்துள்ளது என குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19க்குப் பிந்தைய உலகில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைய வாய்ப்புகள் உள்ளதால், சர்வதேச உயர் கல்வி முதலீட்டில் கணிசமான அளவு வருவாய் குறைய வாய்ப்புள்ளதாக குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் (QS) வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், "சமீபத்திய காலங்களில் வெளிநாட்டில் படிக்க விரும்பிய 48.46 முதுகலை மாணவர்களின் முடிவை கோவிட்-19 பாதித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளோம். இருப்பினும், இந்தியாவுக்கு வெளியே உயர் கல்வியைத் தொடர்வதை மறுபரிசீலனை செய்த STEM (Science, Technology, Engineering, Maths) அல்லாத மாணவர்களில் ஒரு பெரிய விகிதம் இருக்கிறது.
கோவிட்-19க்கு பிந்தைய உலகில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைய வாய்ப்புகள் உள்ளதால், சர்வதேச அளவில் சர்வதேச உயர்கல்வி முதலீட்டில் கணிசமான அளவு வருவாய் குறைய வாயப்புள்ளது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, "உயர்கல்வி நிறுவனங்கள் விரைவில் இணையதள கல்வி நடைமுறைகளுக்கு ஏற்றவாறு மாறக்கூடும். உயர்கல்விக்கான மாணவர் இயக்கத்தின் கடுமையான மாற்றங்களுடன் வருவதற்கு ஒப்பீட்டளவில் நீண்ட நேரம் ஆகலாம். உலகளாவிய பயணம் என்பது தொற்றுநோய்களின் பரவலுக்கு ஒரு முக்கியக் காரணியாகும். கோவிட்-19 தொற்றினால் அனைத்து மட்டத்திலும் உள்ள கல்வியிலும் கற்பித்தலிலும் வெளிப்படையான மாற்றம் ஏற்படப்போவது உறுதி.
இது வரும்காலங்களில் மாணவர்களின் இயக்கம் குறித்து பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கும். சர்வதேச சூழலில் உயர் கல்வி சமூகம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைக் குறிப்பிட்டு பல்வேறு கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன" என்பது தெரியவந்துள்ளது.
தங்களது ஆய்வு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள இந்திய மாணவர்கள் குறித்த சூழலை விளக்குகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.