கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மருத்துவப் பரிசோதனையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சம் பேர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என மத்தியச் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இதுவரை மொத்தமாக 73 லட்சத்து 52 ஆயிரத்து 911 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 195 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 1 லட்சத்து 71 ஆயிரத்து 587 மாதிரிகள் அரசு ஆராய்ச்சிக் கூடத்திலும் 43 ஆயிரத்து 608 மாதிரிகள் தனியார் ஆய்வகத்திலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நாடு முழுவதும் இதற்காக ஆயிரம் ஆய்வகங்கள் இயங்கிவருகின்றன. குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து 495 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக, 2 லட்சத்து 58 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.