உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் தொடங்கியுள்ளது. இதுவரை 84 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவரும், டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்கும் விதமாக பெரும்பாலான மாநிலங்கள் கல்வி நிலையத்திற்கு விடுமுறை அளித்தும், திரையரங்கு, மால்கள் ஆகியவற்றை மூடியும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் முகக் கவசம், கைகளைச் சுத்துப்படுத்தும் சானிடைசர்களுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. என் 95 ரக முகக் கவசங்களை மொத்த விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள டெல்லி மருந்தகங்கள், முகமூடிகள் பதுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதை இதன் மூலம் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளன.
மத்திய சுகாதாரத் துறை பொதுமக்களிடம் பொதுச் சுகாதாரத்தை வலியுறுத்தியதையடுத்து இதுபோன்ற தடுப்புச் சாதனங்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு முகக் கவசம், சானிடைசர்களை அத்தியாவாசிய பொருள்களாக நேற்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மனைவிக்கு கொரோனா - கனடா பிரதமர் வீட்டிலிருந்து வேலை!