கரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வரும் திட்டங்களுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் முடிப்பதற்கான தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு வாங்குவோர், பில்டர்கள் ஆகியோர் பயனடைவர் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனா பாதிப்பு காரணமாக நகரங்களில் நடைபெற்ற கட்டட பணிகள் முடங்கின. இதனைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறையை மீட்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் வீடு வாங்குவோர், பில்டர்கள் மற்றும் பல பங்குதாரர்கள் பயனடைவர். திட்டங்களுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டதால் அறிவிக்கப்பட்ட புதிய தேதிகளில் கட்டட பணிகள் முடிக்கப்படும்" என்றார்.
வெளிமாநில தொழிலாளர்கள் பெருமளவில் தங்கள் மாநிலத்துக்கு சென்று கொண்டிருப்பதால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கட்டட பணிகள் முடங்கியுள்ளன. கட்டட பணிகளுக்கான மூல பொருள்கள் சென்றடைவதில் சிரமம் இருப்பதாலும் பணிகள் பெருமளவு தேங்கியுள்ளன.
இதையும் படிங்க: தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம்: எட்டு கட்சிகள் எதிர்ப்பு