கோவிட்-19 தொற்று பரவலைச் சமாளிக்க நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போது இந்தியா செய்ய வேண்டிய பணிகள் குறித்து ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் காணொலி வாயிலாக உரையாடல் நடத்தினார்.
அப்போது பேசிய ரகுராம் ராஜன், "கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாளுவதில் இந்தியாவில் திறன் குறைவாக உள்ளது. இதனால் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை நாம் வரையறுக்க வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து நாம் முடிவெடுக்க வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து வெளியேறும்போது அது நமக்கு உதவும்.
எதிர்பாராத ஒரு அவசரநிலையை நாம் எவ்வாறு கையாளுவோமோ அப்படித்தான் இந்தப் பெருந்தொற்று சூழ்நிலையைக் கையாள வேண்டும். சில நேரங்களில் நமது நெறிமுறைகளை மீற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதே நேரத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட வளங்கள் உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஊரடங்கைத் தளர்த்தும்போது நமக்குத் தெளிவான ஒரு திட்டமிடல் வேண்டும். பல கோடி இந்தியர்களுக்கு நீண்ட காலம் அரசு உணவளிக்கத் தேவையில்லாத வகையில் (அதாவது இயல்பான சூழலை ஏற்படுத்துதல்) அந்தத் திட்டம் இருக்க வேண்டும். இந்தியாவிலுள்ள ஏழைகளின் உயிரைக் காப்பாற்ற சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்தியாவுக்கு இது மிகப்பெரிய தொகை அல்ல" என்று கூறியுள்ளார்.
ரகுராம் ராஜன் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பொறுப்பிலிருந்தார். தற்போது அவர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ளார்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பால் அதிர்ச்சி!