சீனாவின் வூகான் மகாணத்தில் அறியப்பட்ட புதிரான கரோனா வைரஸூக்கு இதுவரை உலகெங்கிலும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த மக்கள் ஊரடங்கு வருகிற 31ஆம் தேதி வரை பகுதி நேரமாக கடைப்பிடிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நாடு முழுக்க 75 மாவட்டங்களை முழுவதுமாக முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
இதில் மகாராஷ்டிராவில் மட்டும் அதிகப்பட்சமாக 10 மாவட்டங்கள் உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களையும், நாட்டின் தலைநகர் டெல்லியையும் முடக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் விதமாக முடக்க பரிந்துரைக்கப்பட்ட முக்கிய மாவட்டங்கள் அனைத்து மாநிலங்களின் தலைநகராக உள்ளது.
இது நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில் வருகிற 31ஆம் தேதி வரை பொது போக்குவரத்துகள் இயக்கப்படாது.
மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அமெரிக்க துணை அதிபருக்கு கரோனா கண்டறிதல் சோதனை