அமெரிக்காவில் இருந்து வெளிவரும் கிளினிக்கல் ஜர்னல் ஆஃப் என்டோகிரைனாலஜி மெட்மோலிசம் எனும் உட்சுரபியல் வளர்சிதை மாற்றம் குறித்து பேசும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில், ஐம்பது வயதைக் கடந்த பலதரப்பட்டவர்கள் மீதான கரோனா வைரஸின் தாக்கம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
அதில், “பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருந்தியல் வல்லுநர்கள், தொற்று நோய் வல்லுநர்கள், உட்சுரபியல் நோய் மருத்துவர்கள் இணைந்து மனித உடலின் மீதான கரோனா வைரஸின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் தொடர்பான முழுமையான தகவல்களை தொகுத்து வைத்து, சிகிச்சைகளை பரிந்துரைத்து வரும் மிகப்பெரிய தகவல் மையமாக அப்பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
50 வயதைத் தாண்டியவர்களை மையப்படுத்தி மருத்துவ பராமரிப்பு பிரிவில் வைத்து கண்காணித்து வந்துள்ளனர். பொது பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களுடன் ஒப்பிடும்போது தீவிர சிகிச்சை தேவைப்படும் பிற நோயாளிகளுக்கு அதாவது நுரையீரல் நோய், ஆஸ்துமா, இதயநோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களை இந்த நோய் அதிக அளவில் தாக்குகின்றது என்றும் அதிலும் மற்ற நோயின் பாதிப்பில் இருப்பவர்களை விட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரே நேரத்தில் நோயின் தன்மையையும், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவையும் கட்டுப்படுத்த வேண்டியதாக உள்ளது. அதற்கேற்றார்போல உணவுகளையும் அவர்கள் உண்ண வேண்டி உள்ளது. சக்கரை நோயாளிகள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்களின் சர்க்கரை அளவில் திடீர் ஏற்றம், இறக்கமும் அவர்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்குகிறது. கடும் நீரிழிவு நோய்க்குறி உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பேர் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளனர். பராமரிக்கப்படும் நோயாளிகளில், கிட்டத்தட்ட 80 விழுக்காடு பேர் கடும் சுவாசக் கோளாறு நோய்க்குறி (ஏ.ஆர்.டி.எஸ்.) கொண்டிருந்தனர் என்று அறிய முடிகிறது.
நீரிழிவு நோயாளிகள் யாரேனும் கோவிட் -19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகமான மருத்துவ சிகிச்சை உதவிகள் செய்யப்பட வேண்டி உள்ளது. மேலும், அவர்களுக்கு உடம்பில் சக்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற மருந்துகள் தரப்பட வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்களது ரத்த மாதிரிகள் அடிக்கடி மாறுபடுகிறது என்பதால் சக்கரையின் அளவு ஒருநாளைக்கு பலமுறை பரிசோதிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், அவ்வாறு அடிக்கடி ரத்த மாதிரிகள் எடுப்பது அவர்களை கவனிக்கும் மருத்துவர்களின் வாழ்க்கையை அபாயகரமானதாக மாற்றுகிறது" என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறைத் தலைவர் மேரி டி. கோரிட்கோவ்ஸ்கி எம்.டி., கூறுகையில், “பெரியவர்களுக்கு கடும் நோய் ஏற்படுத்தும் ஆபத்தான காரணியாக வயது உள்ளிட்டவை இருப்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பொது அலகுகளில் உள்ளவர்களை விட அவர்களின் உட்சுரபியல் வளர்சிதை மாற்ற நோய்களின் தாக்கம் அதிகமாக பங்கு வகிக்கிறது என்று எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக மிகவும் தெளிவாக அறிய முடிகிறது. முதல் காரணம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் தன்னைத்தானே சீர்ப்படுத்திக்கொள்ள முயன்று அமைதியை மேற்கொள்கிறது. மேலும், இதற்கு அது தன்னை சரிசெய்துகொள்ள அதிகபட்ச நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இரண்டாவது காரணம், கரோனா வைரஸ் தாக்கத்தை அதிகமான ரத்த சர்க்கரை அளவு தீவிரப்படுத்துகிறது.
பாதிப்பிற்குள்ளாகி உள்ள 100 பேரில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பின் தாக்கம் வீரியமடைவதற்கு உட்சுரப்பியல் குறைபாடு கணிசமான பங்கு வகிக்கிறது. மேலும், வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கையில் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட சமூகங்களில் கோவிட்-19 பாதிப்பிற்கான சூழல் அதிகமாக இருக்கலாம். பலருக்கு இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதையும், சிலருக்கு அதிக அளவு கவனிப்பு தேவை என்பதையும் இந்த ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் நினைவூட்டுகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்கள் பற்றிய நமது புரிதலை முற்றிலுமாக மாற்றும். ஆனால், வைரஸ் உண்மையிலேயே அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை” என்றார். கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் குளுக்கோகார்ட்டிகாய்டுகள் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகள் அவர்களின் உடலில் அதிகப்படியான சர்க்கரை அளவை கூட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் வயது முதிர்ந்த நோயாளிகளில் கோவிட்-19 பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகின்றன. ஆனால், வைரஸ் உண்மையில் பெரியவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.