அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் உள்ள கரோனா முகாம் ஒன்றில், நோயாளிகள் அவர்களின் மன உறுதியை உயர்த்தி, ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கும் வகையில் ஆடல், பாடலுடன் உற்சாகமாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர். அந்தக் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், ஒருவர் புல்லாங்குழலில் ஒரு மெல்லிசை இசைக்கும்போது, தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் மற்ற உறுப்பினர்கள் கைதட்டி, அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். அவற்றில் சில தாளங்களுக்குச் சிலர் நடனமாடும் காட்சி பலரும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.
இந்தக் காணொலி ட்விட்டர் பக்கத்தில் பலர் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். அதில் "நல்ல ஆற்றல் நல்ல உந்துதல்" "ஆஹா! மனதைக் கவரும் நல்ல பதிவு" "அவர்களின் மன ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கும் பதற்றமான சூழ்நிலைக்கு சில நேர்மறையான அதிர்வுகளை கொண்டு வருவதற்கும் நல்ல வழி" என்று ட்விட்டர் பயனாளர்கள் தங்களது கருத்துகளை எழுதினர்.
மேலும், மாநிலத்தில் மொத்தம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 791ஆக உள்ளன. இதில் 8 ஆயிரத்து 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். 20 ஆயிரத்து 699 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.