கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாளை (செப்.14) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி, அக்டோபர் ஒன்றாம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிப்பதற்கும், இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போதுள்ள சூழலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறாது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இருப்பினும், மாநிலங்களவையின் வணிக ஆலோசனைக் குழு கூட்டம் இன்று (செப்.13) நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.