கரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதாரக் கழகம் என்ற ஆய்வு நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான சர்வதேச ஆய்வாளர்கள் உள்ளிட்ட 16 மருந்து ஆய்வகங்களுடன் இணைந்து தேசிய சுகாதாரக் கழகம் பணியாற்றவுள்ளது.
ஆக்டிவ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள ஆய்வு நடவடிக்கையில் மருந்து மற்றும் தடுப்பூசியை விரைந்து கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்துவருகிறது.
இது குறித்து தேசிய சுகாதாரக் கழகத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகப் பேரிடராக உருவெடுத்துள்ள கோவிட் - 19 தொற்று பாதிப்பை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைவது அவசியம். இந்த நேரத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து மனித குலத்தை காக்கும் கட்டாயக் கடைமையை நிறைவேற்ற ஆய்வாளர்கள் போராடிவருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் மனித சேவை அலுவலகம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கை மையம், ஐரோப்பிய மருந்தக கழகம், அமெரிக்க உணவு மற்றும் மருந்தக நிர்வாகம் ஆகியவை தேசிய சுகாதாரக் கழகத்துடன் இணைந்துள்ளன.
இந்த நிறுவனங்கள் பரிசோதனை, தரம், அதன் திட்ட வரைவுகள் ஆகியவற்றை நிர்ணயம் செய்யும். உயர் தர பரிசோசனை வசதிகள் நிறுவனங்களுக்கு செய்து தரப்பட்டு அதன் ஒருங்கிணைந்த பலன்கள் பொதுத்தளத்தில் பகிர தேசிய சுகாதாரக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்போதைய சிகிச்சை தரத்தை மேம்படுத்தவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நியூயார்க் - அதிகரிக்கப்படும் ஆன்டிபாடி சோதனை!