உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல முன்னனி நாடுகளின் விஞ்ஞானிகள் மும்முரமாக உள்ளனர். இருப்பினும், கரோனா சிகிச்சைக்கு ஆயூர்வேத மருந்துகளை உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும் என பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் குழுவுடன் நடைபெற்ற காணொலி உரையாடலில், கரோனா பரிசோதனைக்கு ஆயுர்வேத மருந்துகளை உபயோகிக்க அமெரிக்கா,இந்தியா ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்தூ கூறுகையில், " கரோனா போராட்டத்தில் இரு நாடுகளின் இடையிலான அறிவியல் சமூகங்கள் ஒன்றினைந்துள்ளன. கரோனா பரிசோதனைக்கு ஆயுர்வேத மருந்துகளை உபயோகிக்கும் முயற்சிக்கு இந்தியாவிலும்,அமெரிக்காவிலும் உள்ள ஆயுர்வேத பயிற்சியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கரோனா கட்டத்தில் விஞ்ஞானிகள் அறிவு, ஆராய்ச்சி வளங்களை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தோ-யு.எஸ் அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தினர் (Indo-US Science Technology Forum) துரித நடவடிக்கைகள் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகளில் சிறந்து விளங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. COVID-19 தொடர்பான சவால்களை எதிர்கொள்ள, IUSSTF கூட்டு ஆராய்ச்சியாக அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய மருந்து நிறுவனங்கள் குறைந்த விலையில் மருந்துகள், தடுப்பூசிகளை தயாரிப்பதில் உலகளாவிய தலைவர்களாக வலம் வருகின்றனர். இந்தத் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்து அடுத்த மாதம் பரிசோதனை வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.