உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அது குறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78 லட்சத்து 64 ஆயிரத்து 811ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 18 ஆயிரத்து 534ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து 78 ஆயிரத்து 123ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 6 லட்சத்து 68 ஆயிரம் 154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 10 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 469 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று (அக். 24) ஒரே நாளில் 11 லட்சத்து 40 ஆயிரத்து 905 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில்-137, மேற்கு வங்கத்தில் - 59, சத்தீஸ்கரில் - 55, கர்நாடகாவில் - 52, தமிழ்நாட்டில் - 35, டெல்லி - 36 கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. மேலும், மகாராஷ்டிராவில் - 43 ஆயிரத்து 152 பேரும், தமிழ்நாட்டில் - 10 ஆயிரத்து 893 பேரும், கர்நாடகாவில் - 10 ஆயிரத்து 873 பேரும், ஆந்திராவில் - 6 ஆயிரத்து 566 பேரும், மேற்கு வங்கத்தில் - 6 ஆயிரத்து 427 பேரும், டெல்லியில் 6 ஆயிரத்து 225 பேரும், பஞ்சாப் - 3 ஆயிரத்து 679 பேரும் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.
உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில் இருக்கிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4 கோடியே 29 லட்சத்து 24 ஆயிரத்து 533 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 3 கோடியே 16 லட்சத்து 66 ஆயிரத்து 683 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் உயிரிழந்துள்ளனர்.