உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 67 ஆயிரத்து 323ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஆக.24) ஒரே நாளில் 848 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 58 ஆயிரத்து 390ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு விகிதம் 1.86 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து 585ஆக உயர்ந்துள்ளது. 7 லட்சத்து 4 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமாகப் பாதிப்பு பதிவாகிவருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோரிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 6 லட்சத்து 93 ஆயிரத்து 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நேற்றைய தினம் கரோனாவால் புதிதாக 5,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3 லட்சத்து 85 ஆயிரத்து 352ஆக உயர்ந்து இரண்டாமிடத்தில் நீடிக்கிறது.
மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 712 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 20 நாள்களாகத் தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
உலகளவில் 2.35 கோடி பேர் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 8.12 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில், அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: கரோனா காலத்திலும் தொய்வில்லாமல் நடைபெறும் பிற சிகிச்சைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர்