இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி நேற்று ஒரேநாளில் புதிதாக 941 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் நேற்று 143 பேர் குணமடைந்ததன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1489ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த வைரசால் நேற்றுமட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளதால் அதன் மொத்த எண்ணிக்கை 414ஆக உயர்ந்துள்ளது. இத்தொற்றால் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அங்கு இத்தொற்றால் நேற்று 229 பேர் பாதிக்கப்பட்டதன்மூலம், அதன் மொத்த எண்ணிக்கை 2916ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், ஒன்பது இறப்புகள் பதிவானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் அதிக பாதிப்புகள் அடைந்த மாநிலங்கள்
- மகாராஷ்டிரா - 2,916
- டெல்லி - 1,578
- தமிழ்நாடு - 1,242
- ராஜஸ்தான் - 1,023
- மத்திய பிரதேசம் - 987
கரோனாவால் அதிக உயிரிழப்புகள் பதிவான மாநிலங்கள்
- மகராஷ்டிரா - 187
- மத்திய பிரதேசம் - 53
- குஜராத் - 33
- டெல்லி - 32
- தெலங்கானா -18