இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 17 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸால் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் ஏற்கனவே வைரஸால் ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 118 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு எட்டு பேர் இந்த வைரஸால் நேற்று உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 64இல் இருந்து 72ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், கரோனா வைரஸின் தலைநகரமாக மகாராஷ்டிரா மாநிலம் விளங்குகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக இப்பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சீன நாட்டின் வூஹானில் ஊரடங்கு தளர்வு