அமெரிக்காவின் நியூயார்க் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவிலுள்ள நான்கு வயதான நடியா என்ற புலிக்கு கரோனா பாதிப்பு இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. அப்போது இந்த ஆட்கொல்லி வைரஸ் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
நடியாவுடன் ஆறு புலிகளும் அங்கு உள்ளன. அவைகளுக்கும் கரோனா வைரஸ் சோதனை நடத்தப்படவிருக்கிறது. உலகில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் வன விலங்கு என்று நடியா அறியப்படுகிறது.
ஆதலால் உலகெங்கிலும் வன விலங்குகள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது.
மனிதன் மூலமாக விலங்குக்கு பரவியதா?
உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.ஹெச்.ஓ) விலங்குகள் சுகாதாரப் பிரிவு ஆராய்ச்சியாளர்கள், “கோவிட்-19 பெருந்தொற்று வைரஸ் பாதிப்புக்குள்ளான மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவ வாய்ப்பில்லை” என்றே கூறுகின்றனர்.
இருப்பினும், “கரோனா பாதித்த மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்த விலங்குகள் பாதிக்கப்படலாம்“ என்ற கூற்றையும் அவர்கள் நிராகரிக்கவில்லை.
இதற்கு காரணமும் உண்டு. கடந்த காலங்களில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கரோனா பரவியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஹாங்காங்கின் 17 வயதான பொமேரியன் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு அவரின் உரிமையாளர் மூலமாக கரோனா பரவியது. அந்த நாய் தற்போது உயிருடன் இல்லை.
பெல்ஜியம் நாட்டின் பாதுகாவலர் வழியாக பூனை ஒன்றுக்கு கரோனா வைரஸ் தாக்கியது. தொடர்ச்சியாக அந்தப் பூனை வாந்தி எடுத்து மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவித்தது.
ஆகவே தற்போது இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
இருப்பினும் இந்தக் கருத்துகளை நிபுணர்கள் ஏற்று கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம், “தீவிர நோய் பாதிப்புள்ள மனிதர்களிடம் பழகும் விலங்குகளுக்கு இவ்வாறு நடக்கலாம்” என்கின்றனர்.
செல்லப் பிராணிகள் வைரஸால் பாதிக்கப்படலாம்
இதற்கிடையில் மனிதர்களால் வளர்ப்பு பிராணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வைரஸ் பாதிப்பு குறித்து சீனாவில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
அந்த ஆய்வுக் கட்டுரைகள் செல்லப் பிராணிகள் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று கூறுகின்றன.
குறிப்பாக சீனாவில் வெளியான பிரபல ஆய்வுக் கட்டுரைகளை முன்னுதாரணமாக பார்க்கலாம். ஏனெனில் அந்த ஆய்வுக் கட்டுரைகள் செல்லப் பிராணிகளை வைரஸ் தாக்கக் கூடும் என்று உறுதிப்பட தெரிவிக்கின்றன.
மனிதர்களால் நோய்த்தொற்றுக்கு ஆளாகக் கூடும் விலங்குகள் பட்டியலில் பூனை முதலிடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் சார்ஸ்-கோவி3 (கரோனா வைரஸ்) உள்ளிட்ட வைரஸ்கள் தாக்கியதையும் ஆய்வுக் கட்டுரைகள் நமக்கு நினைவுப்படுத்துகின்றன.
மற்றொரு ஆய்வோ பூனைகள் வைரஸால் எளிதில் தாக்கப்பட்டாலும், அவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அதிலிருந்து உடனடியாக மீண்டுவிடும் என்று மேற்கோள் காட்டுகிறது.
இருப்பினும் நாய்களை வைரஸ் எளிதில் தாக்குவதில்லை. இருப்பினும் அவைகள் பாதிக்கப்படலாம். மற்ற வளர்ப்பு பிராணிகளான வாத்துகள், கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு இந்த தொற்றுப் பிரச்னை பெரிய அளவில் ஏற்படுவதில்லை.
கோவிட்19 பரவலுக்கு விலங்குகள் பொறுப்பா?
உலக சுகாதார அமைப்பின் தகவல்கள், “கரோனா (கோவிட்-19) வைரஸ் மனிதனிடமிருந்து சக மனிதனுக்கு பரவுகிறது” என்று தெளிவுப்படுத்துகிறது.
இதற்கிடையில் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியது, தற்போது மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு பரவியுள்ளது என்றும் மாற்றுக்கருத்து உள்ளது.
அந்த மூலத்தைக் கண்டுபிடித்து இந்த நோய் குறித்து கண்டறிய பரிசோதனைகள் தொடர்கின்றன. இருப்பினும், இன்றுவரை அதன் மூலத்தை அடையாளம் காண முடியவில்லை. இது விலங்கு மூலமாக மனிதருக்கோ அல்லது மனிதன் மூலமாக விலங்குக்கோ பரவும் என்பதற்கான சான்றுகளும் இல்லை.
எனினும் இது இருவருக்கும் 'நெருங்கிய உறவினர்' என்பதை மரபணு தரவுகள் வெளிப்படுத்துகிறது. ஆகவே இந்த இடைநிலையில் வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளன.
செல்லப் பிராணிகள் பாதுகாப்பு
ஆகவே பாதிக்கப்பட்ட நபர் செல்லப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளுடனான தொடர்பைக் கட்டுப்படுத்த வேண்டும்.
முடிந்தால், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உங்கள் விலங்குகளை உங்கள் வீட்டு பராமரிப்பில் மற்றொரு உறுப்பினரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
செல்லப் பிராணிகளுடன் எக்காரணம் கொண்டும் தொடர்பு வேண்டாம். செல்லப்பிராணிகளை தொட்டு தூக்குவது, முத்தமிடுவது மற்றும் உணவைப் பகிர்வது கூடாது.
அவைகளிடம் கொஞ்சி பேசும் போதும், விளையாடும் போது நீங்கள் சுத்தமாக இருப்பது அவசியம். அவைகளை சுத்தமாக பராமரிப்பது கட்டாயம்.!