கேரள மாநிலம் மலப்புரத்தில் ஷாஹான் பின் ஷிஹாப், ஷாஹித் சமன் ஆகிய இரண்டு சிறுவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வசித்துவருகின்றனர். இவர்களது தந்தை ஷிஹாபுதீன், கத்தார் நாட்டில் ஓட்டுனராக வேலை செய்துவருகிறார்..
சிறுவர்களிடம் ஷிஹாபுதீன் முதல் மாத சம்பளத்தில் சைக்கிள் வாங்கி தருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, தனது முதல் மாத சம்பளத்தில் சிறுவர்கள் சைக்கிள் வாங்கிக் கொள்ள எட்டாயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார்.
அந்தப் பணத்தை சிறுவர்கள், கரோனா நிவாரணமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். சிறுவர்களுக்கு சைக்கிள் வாங்க பணம் கிடைத்தாலும், கொடிய கரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் கஷ்டப்படும் நேரத்தில் அந்தப் பணத்தை சைக்கிளுக்காக செலவிட அவர்களுக்கு மனம் வரவில்லை.
அந்தத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியாக உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் கே.டி. ஜலீலிடம் ஒப்படைத்தனர். சிறுவர்களின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.