டெல்லியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மூத்த தலைவர்களுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஊரடங்கு நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் காாங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, முன்னாள் பிரதமரும் எம்பியுமான மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனையின்போது, ஊரடங்கு முடிந்தபிறகு பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பஞ்சாப் மிகுந்த பொருளாதார பாதிப்புகளை சந்தித்துவருவதாக வருத்தம் தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மூன்றாயிரத்து 360 கோடியாக இருந்த மாநிலத்தின் வருவாய், மே மாதத்தில் 396 கோடியாக குறைந்துள்ளது என்ற அவர் மத்திய அரசிற்கு செலுத்தவேண்டிய 4365.37 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை தற்போதுவரை செலுத்தப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எவ்வித தளர்வுமின்றி நிதி அளிக்கப்பட்டுவருவதாகவும், மாநிலத்தில் மீண்டும் சுகாதாக கட்டமைப்பை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருவதாக கூறினார்.
இதற்காக மான்டெக் சிங் அலுவாலியா தலைமையிலான நிபுணர்களின் குழு மாநிலத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை மறுமலர்ச்சி குறித்து ஆய்வு செய்துவருவதாகவும், மூன்று மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பான அறிக்கையை அவர்கள் இன்னும் சில வாரங்களில் சமர்பிப்பர் எனவும் தெரிவித்தார்.
தற்போதுவரை மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டும், 25 பேர் இறந்தும் உள்ள நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து பஞ்சாப் திரும்பும் மக்களால் மீண்டும் மாநிலத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து மாநிலம் திரும்புவோர்களுக்கான சிற்பபு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மே மாதத்திற்குள் இருபதாயிரம் பேர் பஞ்சாப்பிற்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பஞ்சாப் திரும்பும் மக்களின் பயண செலவிற்காக 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் முக்கிய யோசனைகள் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பஞ்சாப்பில் நாளொன்றுக்கு இரண்டாயிரத்து 500 பேருக்கு பரிசோதனை செய்துவருவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, தங்களது மாநிலத்திற்கான தேவைகள், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மாநிலத்திற்கான வருவாய் மானியம், 15 வது நிதி ஆணையத்தின் நடப்பு ஆண்டு அறிக்கை, நடப்பு ஆண்டு அறிக்கையை மறுஆய்வு செய்தல், வேலைவாய்ப்பு இழப்பு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாய மற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் பகிர்ந்துகொண்டார்.
பின்னர், இந்த பெருந்தொற்று காலத்திலும், நூறு லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விளைவித்த பஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெருந்தொற்றுக் காலத்தில் 1 கோடி மெட்ரிக் டன் கோதுமையை விளைவித்த பஞ்சாப்