டெல்லி : இந்தியாவில் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 281ஆக உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 லட்சத்து 36 ஆயிரத்து 11ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (நவ.11) ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி 512 பேர் உயிரிழந்ததையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 571ஆக உள்ளது. இதன் விழுக்காடு 1.48ஆக உள்ளது.
இருப்பினும், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 80.13 லட்சமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விழுக்காடு 92.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் குறைந்து நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 657ஆக உள்ளது. இதனால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5.73 விழுக்காடாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.எம்.ஆரின் தகவலின் படி, நேற்று ஒரே நாளில் 11 லட்சத்து 53 லட்சத்து 294 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை எடுக்கப்பட்ட மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 கோடியே ஏழு லட்சத்து 69 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் 379 மருத்துவ முகாம்கள்!