தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் படுமோசமாக உள்ளது. டெல்லியில் இதுவரை 73,780 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,
டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது. எனவே யாரும் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
சோதனை செய்வதை நாங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதோம். ஆனால் நாள்தோறும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோரூக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதில் 45,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 2,400 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலத்தில் 26,000 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 6,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 20,000 பேர் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாள்தோறும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட போதிலும் கடந்த ஒரு வாரத்தில் 6,000 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது எங்களிடம் கூடுதலாக 13,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
எதிர்வரும் நாட்களில் அதிக ஐசியூ படுக்கைகள் தேவைப்படும். முதல் கட்டமாக புராரி மருத்துவமனையில் 400 ஐசியூ படுக்கைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.