உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 57 ஆயிரத்து 29ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 019 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்து 57 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 94.93 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 33 ஆயிரத்து 136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 546 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை மொத்தம் 15 கோடியே 37 லட்சத்து 11 ஆயிரத்து 833 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்று (டிச. 12) ஒரே நாளில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 434 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் அவை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ளத் திட்டம் தயாரிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு முன்களப் பணியாளர்களின் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவி ஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் 3ஆவது கட்ட பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.