கோவிட் 19 வைரஸ் தொற்று தற்போது சீனாவில் குறைந்துவரும்போதும் இத்தாலி, ஈரான், இந்தியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்து, வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி திகழ்கிறது.
இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக இத்தாலியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக அங்கு சிக்கித்தவித்த இந்தியர்கள், நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அவர்கள், இரண்டு கட்டங்களாக இந்தியா அழைத்துவரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இத்தாலியில் படித்துவந்த மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் தென்மேற்கு டெல்லியிலுள்ள இந்தோ-திபத் காவல் படையின் தடுப்பு முகாமில் இரண்டு வாரங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தடுப்பு முகாமிலுள்ளவர்களில் இருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தடுப்பு முகாமிலுள்ள அலுவலர்களும் உறுதிசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா முன்னேற்பாடுகள் குறித்து மத்திய அரசுக்கு கார்த்தி சிதம்பரம் பாராட்டு