மும்பை: கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட பிரபல தாதா சோட்டா ராஜன் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த நந்து வஜ்ஜேகர் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு புனேவில் நிலம் ஒன்று வாங்கியுள்ளார். இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட பர்மானந் தக்கர் என்பவருக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
பர்மானந் அதிக பணம் கேட்கவே, நந்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து பர்மானந் சோட்டா ராஜனை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து 26 கோடி ரூபாய் அளிக்காவிட்டால், கொலை செய்துவிடுவேன் என சோட்டா ராஜன் நந்துவை மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரையடுத்து, சோட்டா ராஜன், சுமித் விஜய், லக்ஷ்மன் நிகம், சுரேஷ் சின்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கினை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் கைதான நான்கு பேருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: காவலரான மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை