மகாராஷ்டிரா மாநிலம், நந்தூர்பார் பகுதியைச் சேர்ந்த மனோகர் - ஜோதி ஆகிய மணமக்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. துலே மாவட்டத்தில் உள்ள மனோகரின் சொந்த கிராமத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு அதற்கானப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்றன.
இந்நிலையில், மணமகள் ஜோதி, தான் பணியாற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பத்திரிக்கை வைக்க மனோகரை அழைத்துச் சென்றிருந்தார். அப்போது, திடீரென்று ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இருவரும் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசையிலிருந்த மணமக்கள், ஜோதி பணியாற்றும் அலுவலகத்தினரை தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் திருமணத்தை நடத்துவதற்கான அனுமதியை உரிய அலுவலர்களிடமும், காவல் துறையினரிடமும் பெற்றார். வட்டாட்சியர் அலுவலகத்தின் ஊழியர்கள் முன்னிலையில், மதச்சடங்குகளின்படியே திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
திருமணத்தை மணமக்கள் வீட்டாரின் குடும்பத்தினர், நண்பர்கள் ஃபேஸ்புக் நேரலையில் பார்த்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஊரடங்கால் தள்ளிச்சென்ற திருமணங்கள் மத்தியில், எப்படியாவது திருமணத்தை நடத்த வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்த திருமண ஜோடிகளின் எண்ணம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதையும் படிங்க: கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு