மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து குடித்தனம் நடத்தி வருபவர்கள் ராஜ்குமார் அஹிர்வார் - சாவித்ரி தம்பதியினர். இவர்கள் விவசாயம் செய்து வரும் நிலத்தில் அரசுக்குச் சொந்தமான கல்லூரி அமையவுள்ளதால், அப்பகுதி விதிகளை மீறி வசித்து வருபவர்களை காவல் துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராஜ்குமார் - சாவித்ரி தம்பதியினரை காவல் துறையினர் வெளியேறுமாறு கூறியபோது, இப்போது தான் பயிரிட்டுள்ளேன். விவசாய பணிகள் முடிவடைந்த பின் அனைத்தையும் காலி செய்துவிடுகிறேன் என கூறியுள்ளார். இதனைக் காதில் வாங்காத காவல் துறையினர், விவசாய நிலங்களை அழித்து தம்பதியினரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த தம்பதியினர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். இதனால் பதறியபடி காவல் துறையினர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த காவலர்கள் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் விவசாயிகளைக் காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் கூறுகையில், ''கருணையில்லாமல் விவசாயிகள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு என்ன காட்டிலா நடக்கிறது?. அது அரசு நிலம் என்றால் சட்டரீதியாக பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இடத்தை காலி செய்வதற்காக குழந்தைகள், முதியோர், தம்பதியினர் என பாகுபாடின்றி தாக்கியதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்'' என்றார்.
இதனிடையே, விவசாயிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குணா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இடமாற்றம் அளித்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் நடவடிக்கை எடுத்துள்ளார். பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 50 நாள்களாக எரியும் அஸ்ஸாம் எண்ணெய்க் கிணறு!