உத்தரகாண்ட் மாநிலம், தெஹ்ரியைச் சேர்ந்த கமலேஷ் பட் துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து கமலேஷ் பட்டின் உடல் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கோவிட் 19 பெருந்தொற்று பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவ்வுடலைப் பெற மறுப்புத் தெரிவித்து கமலேஷின் உடல் இந்தியாவிலிருந்து துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் ரோஷன் ரதுரியின் முயற்சியால் கமலேஷ் பட்டின் உடல் மீண்டும் இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், கமலேஷின் உடல், மேலும் இரண்டு சடலங்களுடன் அபுதாபி விமான நிலையத்திலிருந்து ஒரு சரக்கு விமானத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு, டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
இதற்கிடையில், கரோனா பெருந்தொற்று பீதி நிலவிக்கொண்டிருக்கும் சூழலில், எந்தவொரு சடலத்தையும் இந்தியாவில் தரையிறக்க அனுமதிக்க முடியாது என இரவு 10 மணிக்கு இந்தியத்தூதரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து கமலேஷ் பட் மற்றும் இருவரின் உடல் அதே சரக்கு விமானத்தில் துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் பட்டின் குடும்ப உறுப்பினர்கள் செய்வதறியாது, சோகத்துடன் சொந்த ஊர் திரும்பினர்.