இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, வட மாநிலங்களில் கல்வி நிலையங்கள், மால்கள், திரையரங்குகள் ஆகியவை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த விஷயத்தில் பஞ்சாப் மாநிலம் தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சுமார் 6 ஆயிரம் பேர்களில் 335 பேரின் பயண விவரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் சந்து தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் குறித்த விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு குறித்து மத்திய சுகாதாரத் துறை சார்பில் மாநில அரசுகளுக்குத் தொடர்சியான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: மனைவிக்கு கொரோனா - கனடா பிரதமர் வீட்டிலிருந்து வேலை!